Skip to content Skip to sidebar Skip to footer

வெறுமையான கடவுள்கள்!

மத்தியான வேளை சென்ற பின்பு அந்திப்பலி செலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்;. ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை; மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை; கவனிப்பாரும் இல்லை (18:29).

ரால்ப் பார்ட்டன் ஒரு வெற்றிகரமான கேலிச் சித்திரக்காரர். ஆனால் அவர் ஒரு சீட்டு எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அவர் எழுதிவைத்திருந்ததாவது:

“எனது வாழ்வில் துன்பங்களே இல்லை. எனக்கு எண்ணற்ற நண்பர்கள் உண்டு. நான் என் வாழ்க்கையில் பல வெற்றிகளை அடைந்துள்ளேன். நான் ஒரு மனைவியைவிட்டு இன்னொரு மனைவி என்று பல மனைவிகளை அனுபவித்துள்ளேன், நான் பல வீடுகள் மாறியுள்ளேன். இந்த உலகத்தின் பெரிய நாடுகள் அத்தனைக்கும் போய் வந்துள்ளேன். ஆனால் ஒவ்வொரு நாளும் 24 மணி நேரத்தையும் கழிப்பதற்கு வழிவகைகளைத் திட்டமிட்டுச் சலிப்படைந்து போனேன்” (எனவே தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளேன்) என்பது கருத்து. எவ்வளவு பயங்கரம்! இந்த ரால்ப் பார்ட்டனைப்போல மாயையான இந்த உலகின் வெறுமையான காரியங்கள் மேல் நம் நம்பிக்கையை வைப்போமானால் விளைவுகள் பயங்கரமாயிருக்கும்.

பாகாலின் தீர்க்கதரிசிகள் இதைக் கண்டு பிடித்திருந்தார்கள். அவர்கள் தங்களது வழிபாட்டில் பைத்தியம் பிடித்தவர்கள்போல் வெறிகொள்ளுவதும் உண்டு. ஆனால் ஒரு பயனும் இல்லை. தங்கள் உடலைக் கீறி இரத்தம் சிந்தும் செயலைக்கூடச் செய்வார்கள். ஆனால் அவற்றால் எந்தப் பயனையும் கண்டதில்லை.

எலியா அவர்களைப் பரியாசம் பண்ணினான். ஆனால் அவன் ஒரு முக்கியமான சத்தியத்தை வெளிப்படுத்தினான் ஒருவரும் வீட்டில் இல்லை. ஒரு சத்தமும் கேட்கவில்லை ஒரு பதிலுரையும் வரவில்லை. அவர்களது வேண்டுதல்களுக்குப் பதிலளிக்க எந்தக் கடவுளும் இல்லை. ஆனால் கடைசியில் அவர்கள் அனைவரது மரணத்துக்கும் அது வழிவகுத்தது (வச40).

இந்த உலகம் தரக்கூடிய யாவும் வெறுமையாகவே இருக்கும். பணம், புகழ், நல்ல நேரங்கள் இவை நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்ப முடிவதில்லை. ஏனென்றால் அவற்றுள் சாரம் இல்லை. நாம் அவற்றைப் பார்க்கும்போது அவை உண்மையிலேயே சாரம் உள்ளதுபோலக் காணப்படும். ஆனால், வாழ்க்கையில் நெருக்கடிகள் தாக்கும்போது அவை மிட்டாயைப்போல கரைந்து போகும். அவை முடிவில் நமது மரணத்துக்கு வழிநடத்தும். நித்திய மரணம் பிதாவாகிய தேவனிடமிருந்து நமக்குப் பிரிவு. பாகாலின் தீர்க்கத்தரிசிகள் செய்த தவறை நீங்களும் செய்யாதிருங்கள்.

தேவபிள்ளையே, இயேசு உண்மையானவர் என்று அறிவதால் தேவனுக்கு நன்றி கூறுங்கள். இயேசுவின் உயிர்த்தெழுதல் அவர் வெறுமை அல்ல; சாரம் உள்ளவர் என்பதை நமக்குக் காட்டுகிறது. அவரைப் பற்றிக்கொள்ளும்போது நீங்கள் எதற்கும் கவலைப்படவேண்டியதில்லை.

உங்கள் வாழ்க்கை வெறுமையாய் இருக்குமானால் அதை இயேசு கிறிஸ்துவைக்கொண்டு நிரப்புங்கள்.

ஜெபம்: அன்பின் தேவனே, உலக மாயையையும் வெறுமையையும் நம்பி நாங்கள் ஏமாறாமல் சாரம் நிறைந்த உம்மைப் பற்றிக்கொள்ள எங்களுக்கு கிருபை தாரும். ஆமென்.

Leave a comment